ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லாபேஜர் கிருஷ்ணமூர்த்தி

அடிப்படைவாதம் வளர்கிறதா?

Published on

காலில் ஒரு சின்ன கட்டுடன் இருந்தார் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ.  ஒரு எதிர்பாராத கார் விபத்தில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறியிருக்கவில்லை. சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் அந்திமழைக்காக அவருடன் உரையாடினோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு?

அதை எங்கள் கட்சியின் உயர்மட்டக் குழுதான் முடிவெடுக்கும். இருப்பினும் பாஜக இருக்கும் எந்த அணியிலும் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்பதை மட்டும் இப்போதே சொல்லிவிடலாம்.

எந்த கூட்டணியில் தமிழகத்தில் இப்போது இருக்கிறீர்கள்? 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இருந்தாலும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தீர்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் முடிந்ததும் கூட்டணியும் முடிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு மட்டுமல்ல. கூட்டணிக் கட்சிகள் யாருக்குமே இடமளிக்கவில்லை. எனவே கூட்டணி என்று சொல்வதற்கில்லை. ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக தலைவர் கலைஞர் திமுக வேட்பாளரை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்காக எங்களிடம் ஆதரவு கேட்டுக் கடிதம் எழுதினார். ஆனால் அதே கடிதத்தை பாஜகவுக்கும் அவர் எழுதியதுதான் எங்களுக்கு வருத்தம்.

நாட்டில் மோடி அலை வீசுவதாகச் சொல்கிறார்களே?

குஜராத் முதலமைச்சர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேண்டியவர். அவற்றின் ஏவலாள். அந்நிறுவனங்கள் அவரது மாநிலத்தில் ஏராளமான சலுகைகள் அனுபவித்து வருகின்றன. இதன் விளைவாகத் தான் அச்சு மின் ஊடகங்களில் மோடியைப் பற்றி போலியான பிம்பம் கட்டமைக்கப் படுகிறது. இதற்கு பல எடுத்துக் காட்டுகள் சொல்லலாம். உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய 15,000 குஜராத்திகளை ஒரே நாளில் மோடி மீட்டார் என்று நம்பமுடியாத செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால் இப்போது பைலின் புயலில் சிக்கிய ஒரிசா மக்களை  நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்பட்டு பாதுகாத்துள்ளார். அவரைப் பற்றி செய்தியே இல்லை. இந்த போலி பிம்ப பிரச்சாரம் 2004-ல் பாஜக ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்தைப் போன்றதுதான். அதுபோலவே இதுவும் எடுபடாது.

சமீபத்தில் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட சிலர் தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களைக் கொன்ற வழக்கில் பிடிபட்டுள்ளனரே...

முதலவதாக ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அரசியல் ரீதியான கருத்துக்களை அரசியல் மூலமாகத் தான் எதிர்கொள்ளவேண்டும் வன்முறை மூலம் அல்ல. யார் செய்தாலும் அது தவறுதான். இதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் நடைபெற்றிருக்கும் எல்லா கொலைகளுக்கும் இந்த மூவர்தான் காரணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபத்தில் கோவையில் அனுமான் சேனா படையைச் சேர்ந்தவர் காணாமல் போய் அவர் கடத்தப்பட்டார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அது அவரே நடத்திய நாடகம் என்று தெளிவாகியது. தொடர்ச்சியாக கோவைப் பகுதிகளில் பாஜக இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்து கடைசியில் கோவை மாநகரக் காவல் துறையினர், சம்பந்தப்பட்டவரே நாடகம் ஆடினர் என்றும் கண்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவங்கள் இந்த மூன்று பேர் தேடுதல் வேட்டை நடைபெற்ற தருணத்தில் நடந்தவை. இதனால் இவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்ல வரவில்லை. சம்பந்தப் பட்டிருக்கலாம். ஆனால் இவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று காவல்துறையோ அவர்களுக்கு விருதுகளை வழங்கிய முதலமைச்சரோ தீர்மானிக்க முடியாது. இந்திய குற்றவியல் சட்டம் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை அளிக்கவில்லை. அதை நீதி மன்றம் தான் தீர்மானிக்கும். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிலர் இப்படி உருவாகிறார்கள். ஆனால் அதை வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றம் சாட்டக்கூடாது.

சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஷிண்டே கடிதம் எழுதினாரே?

அவர் எழுதிய கடிதத்தில் சொல்லப் பட்டிருப்பவை சரியான விஷயங்கள்தான். ஆனால் அவர் சொல்லும் ஆலோசனை மத்திய அரசுக் கும் பொருந்தும். அதை மத்திய அரசு முதலில் கடைபிடிக்கிறதா? அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறைதான் அதிகமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்துள்ளது. சிலர் 12- 17 ஆண்டுகள் கழித்துக் கூட தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று விடுதலை ஆன சம்பவமும் உண்டும். இப்படி நீண்டகாலம் தங்கள் இளமைக் காலத்தை சிறையில் இழந்த முஸ்லிம்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் தமீம் அன்சாரி  என்ற இளைஞர் கொழும்புக்குச் செல்லும்போது திருச்சி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.  பாகிஸ்தான் உளவுத்துறையுடன் அவருக்குத் தொடர்பு என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ஆறுமாதம் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டு மூன்று மாதம் ஆகிவிட்டது. அவர்களும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. வியாபாரம் செய்துகொண்டிருந்த அந்த இளைஞரின் வாழ்க்கை நிர்மூலம் ஆகிவிட்டது இல்லையா? இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறை மீதான நம்பிக்கை குலைகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தமிழகத்தில் அதிகரிப்பதாகச் சொல்கிறார்களே...

அடிப்படைவாதம் என்றால் என்ன? இஸ்லாமைப் பொருத்தவரை அதன் அடிப்படை அம்சங்கள் ஐந்துவேளை தொழ வேண்டும். ரம்ஜானுக்கு நோன்பு இருக்க வேண்டும். செல்வந்தர்களாக இருந்தால் தங்கள் சேமிப்பில் 2.5% ஏழை வரி கொடுக்கவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஹஜ்ஜுக்குச் செல்லவேண்டும். பொய் சொல்லக்கூடாது. நேர்மையாக நடக்கவேண்டும். பிற மக்களுக்கு சேவகம் செய்யவேண்டும். இந்த அடிப்படைகளை ஒரு முஸ்லிம் பின்பற்றுவதால் மற்றவர்களுக்கு எந்த இடையூறுகளும்  ஏற்படுவதில்லை. தமிழ்நாட்டில் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு, கொள்கைகள் சம்பந்தமான விழிப்புணர்ச்சி இப்போது மேம்பட்டுள்ளது என்பது உண்மைதான். அதை அடிப்படைவாதம் என்ற கருத்தில் பிறர் மீது திணிப்பதற்கோ பிறருக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் நடந்திருக்கிறதா என்றால் இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக முஸ்லிம்கள் போராடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 20-30 ஆண்டுகளுக்கு முன்பாக  முஸ்லிம் கட்சிகள் எடுத்துக் கொண்ட விஷயங்களுக்கும் இப்போதிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களுக்கும் பார்த்தால் பொதுத்தளத்தில் ஏராளமான முஸ்லிம்கள் வந்துள்ளனர். இது தமிழகத்தின் நன்மைக்குத்தான் பங்களித்திருக்கிறது.

தர்கா வழிபாடு தூய இஸ்லாத்துக்கு எதிரானது என்கிறார்களே.. ஆனால் , மத நல்லிணக்கத்துக்கு தர்காக்கள் பெரும் பங்கு வகிப்பவை அல்லவா?

இஸ்லாமிய மத அடிப்படைகள் படி வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமே இல்லை. நபிகள் நாயகம் இறைவனின் தூதுவர் என்ற அளவில்தான் இஸ்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் சமாதியை வணங்குவதை ஏற்றுக்கொள்ளாத மதம்தான் இஸ்லாம். தர்காக்களைப் பொருத்தவரை அவர்கள் எல்லாம் சமூக சேவை செய்த பெரிய மகான்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பரஸ்பரம் சமூகங்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் சமூக நல்லிணக்கம் வளரும்.

இஸ்லாத்தில் ஷியா சன்னி அகமதியா போன்ற பலபிரிவுகள் உள்ளன. இதில் அகமதியா பிரிவினர் ஒடுக்கப் படுகின்றனர். போரா முஸ்லிம்களிடையே சீர்திருத்தம் கொண்டுவர முயன்ற அஸ்கர் அலி எஞ்சினியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற உள் வேற்றுமைகளை எப்படி அணுகுகிறீர்கள்?

முதலில் ஒன்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். அகமதியாக்கள் என்கிற காதியானிகள் இஸ்லாமின் வட்டத்துக்குள் வருபவர்களே அல்ல. இஸ்லாமின் அடிப்படைக்கோட்பாடு இறைவன் ஒருவன். நபிகள் நாயகம் இஸ்லாத்தின்  இறுதித் தூதர் என்பதே. ஆனால் அந்த கோட்பாட்டுக்கு மாறாக காதியான் என்ற ஊரில் பிறந்த குலாம் அகமது என்கிறவர் இறை தூதர் என்கிற கோட்பாடு கொண்டவர்கள் இந்த காதியானிகள். முஸ்லிம்களுக்கு இடையில் பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரர்கள் உருவாக்கியதுதான் காதியானிஸம் எனப்படுகிற அகமதியா. சுன்னத், ஷியா- பிரிவுகளுக்கு இடையில் இஸ்லாத்தின் அடிப்படை விவகாரங்களில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் ஷியாக்கள், நபிகள் நாயத்துக்குப் பின்னர் அவரது மருமகனாக இருந்த அலி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர்கள். அதற்குப் பதிலாக நபிகளின் மாமனாரான அபுபக்கர்தான் முதல் ஆட்சியாளராக வருகிறார். அதிலிருந்துதான் சுன்னத் பிரிவு உருவானது. உலக அளவில் சுன்னத் ஜமாத் முஸ்லிம்கள்தான் பெரிய அளவில் இருக்கிறார்கள். அதேநேரம் மக்கா, மதீனா வர ஷியாக்களுக்கு எந்த தடையும் இல்லை. சவுதி அரேபியாவில் கிழக்கு மாகாணத்தில் ஷியாக்கள் நிறைய உள்ளனர். இந்த ஷியாக்களில்  ஒரு உட்பிரிவுதான் இந்தியாவில் உள்ள போரா சமூகம். அஸ்கர் அலி எஞ்சினியர் அதைச் சேர்ந்தவர். போரா சமூகம் அதற்கு தலைமைப் பதவி வகிப்பவருக்கு முற்றிலும் கட்டுப்பட்ட ஒரு சமூகமாக இருக்கிறது. அப்படி கண்மூடித்தனமாக அவர் சொல் வதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் அஸ்கர் அலியின் நிலைப்பாடு. சமூகங்களுக்கு மத்தியில் பிளவுகளும், அவற்றுக்கு இடையில் மோதல்களும்  நடப்பது சகஜம் என்கிற நிலையில்தான் இதைக் கருத வேண்டும்.

தற்கால நவீன இலக்கியத்துடன் இஸ்லாமியர்கள்  பெருமளவு தொடர்பில்லாமல், அதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுபோலத் தோன்றுகிறதே.. மனுஷ்யபுத்திரன், சல்மா, கீரனூர் ஜாகிர் ராஜா போன்ற சிலரையே கூற முடியும் என்ற விமர்சனம் சொல்லப் படுகிறது...

சமகாலத்தில் இலக்கிய பங்களிப்பு இல்லை என்றுசொல்ல முடியாது. தமிழகத்தில் புதுக்கவிதை என்றால் மேத்தாவையும் அப்துல் ரகுமானையும் ஒதுக்கிவிட்டுப் பார்க்க முடியுமா? வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி புதுக்கவிதையின் தொட்டிலாக இருந்தது. ஏராளமான புதுயுக இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய முக்கியத்தை பொது ஊடகங்கள் தரவில்லை. உதாரணமாக சிராஜுல் ஹசன். சமரசம் பத்திரிகையின் பொறுப்பாசிரியர். முஸ்லிம் சமூக  கலாச்சாரம், பண்பாட்டை முன்வைத்து எழுதுபவர் அவர். தோப்பில் முகமது மீரான் மிகச் சிறந்த நாவல்களைத் தந்தவர். சாண்டில்யனுக்கு இணையாக வரலாற்று நாவல்களை தந்தவர் அசன். ஆனால் அவரது நாவல்களை குமுதமும் விகடனும் தொடர்களாக வெளியிட வில்லை. பொதுத் தளத்தில் அவருக்கு ஏன் அங்கிகாரம் அளிக்கப்படவில்லை? ஆனால் எழுத்தாளர் சல்மா, ஆபாசம், விரசம் கலந்து  எழுதினால் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். ஒழுக்கம் சார்ந்த கதைகளை எழுதினால் ஏற்றுக் கொள்வதில்லை. கவிஞர் ஹாஜா கனி, பிர்தௌஸ் ராஜகுமாரன், ஆளுர் ஷாநவாஸ், போன்ற சிறந்த எழுத்தாளர்கள் உள்ளனர்.

நவம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com